×

தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்


சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நீலகிரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன.

அதேபோல, ஈரோடு, விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சிறிது நேரம் செயலிழந்தன. இது தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. கூடுதல் கேமராக்களை நிறுவும்படியும், எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

The post தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,Madras High Court ,Chennai ,Lok Sabha ,Puducherry ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தேர்தல் ஆணையம் விளக்கம்